Thursday, 9 October 2014

கஜலட்சுமி விரதத்தை கடைபிக்கும் முறைகள்


         அன்றைய தினம் விரதமிருந்து வீட்டில் உள்ள பூஜை அறையிலோ வேறு அறையிலோ பீடம் அமைத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு முகமாக அமைக்கப்பட்ட அப்பீடத்தில் சதுரமாக நெல் பரப்பி, அதிலே ஒரு தட்டில் பச்சரிசி பரப்பி, கலசம் அமைக்க வேண்டும். ஐம்முக விளக்கோ காமாட்சி விளக்கோ வைக்க வேண்டும். ஒரு தட்டில் அருகம்புல் பரப்பி, அதன் மீது மஞ்சள் அல்லது பசுஞ்சாணத்தில் செய்த பிள்ளையாரை வைக்க வேண்டும். விளக்கிற்கு நெய்விட்டு ஏற்ற வேண்டும். செந்தாமரை, மல்லிகை, சாமந்தி, மரிக்கொழுந்து ஆகியவற்றால் கலசத்தையும் விளக்கையும் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.

           இளநீர், பால், கல்கண்டு, பால்பாயாசம், பழங்கள், அவல், பொரிகடலை, தேங்காய், ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம் ஆகியவற்றையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பூசணிக்காய் வாங்கி அதில் மேல் பக்கம் சதுரமாக நறுக்கி எடுக்க வேண்டும். அதில் மஞ்சள் சுண்ணாம்பு அல்லது செந்நிறக் குங்குமம் ஆகியவற்றை இட்டுச் சிறிது தண்ணீர் ஊற்றி சில்லறைக் காசுகளையும் இட்டு, மூடி, பூஜை பீடத்தின் அருகே வைக்க வேண்டும். நான்கு எலுமிச்சம்பழத்தை பூஜை மேடையில், கலச பாதத்தில் வைக்க வேண்டும்.

           முதலில் விநாயகருக்கு அருகம்புல்லை அர்ச்சனை செய்தபடி 
அஷ்டோத்ர சத நாமாவளி சொல்ல வேண்டும். பிறகு, கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். திருவிளக்கு ஸ்தோத்திரங்களைச் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை முடித்து திருவிளக்குக் கற்பூர தூப தீபம் காட்ட வேண்டும். திருவிளக்கை வணங்கிய பிறகு, கலசத்திற்குக் கற்பூரம் காட்டிவிட்டு, கஜலட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி கூறியபடி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

          அர்ச்சனை முடிந்து அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள் சொல்லி முடித்து கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். வேறு ஒருவரிடம் ஒரு பூசணிக்காயைக் கொடுத்து கற்பூரத்தை வைத்துக் கொளுத்தி, சேர்ந்து நிற்கும் வீட்டார் எல்லாரையும் மூன்று முறை சுற்றி, பின்பு வீடு முழுவதும் பூசணிக்காயைச் சுற்றி முச்சந்தியில் உடைக்கச் சொல்ல வேண்டும். எலுமிச்சம் பழத்தையும் இதேபோலச் சுற்றச் செய்து, வாயிலில் வைத்து, காலால் நசுக்கி, திசைக்கு ஒரு பழமாக எறிந்து விட வேண்டும். மீண்டும் பீடத்தில் கலசத்திற்குக் கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.


(source: Dinakaran Newspaper)

No comments:

Post a Comment

Total Pageviews