Friday, 31 October 2014

காலமெல்லாம் காப்பாள் காமேஸ்வரி நித்யா தேவி



தேவி பராசக்திக்கு அவள் அற்புத லீலைகளை விளக்க ஆயிரம் திருநாமங்கள். அதில்ப்ரதிபன் முக்யராகாந்த திதி மண்டல பூஜிதாஎன்றும், ‘நித்யா  பராக்ரமாடோப நிரீஷண ஸமுத்ஸுகாஎன்றும் இரு நாமங்கள். அதாவது, ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான திதி தேவதைகளால் பூஜிக்கப்படுபவள்; நித்யா  தேவதைகளின் பராக்கிரமத்தைக் காண்பதில் ஆசையுள்ளவள் என அந்த இரு நாமங்களின் பொருள். ஒவ்வொரு திதியிலும் அம்பிகையை முறைப்படி பூஜிக்க  வேண்டும் என்று தந்த்ரசாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. இம்மாதிரியான பூஜா விசேஷங்களால் வழிபடப்படுபவள் என்றும் பொருள் கொள்ளலாம்

பிரதிபன்என்பது, முதல் நித்யா தேவியான காமேஸ்வரியையும்ராகாஎன்பது பதினைந்தாம் நித்யாவான சித்ராவையும் குறிக்கும் என்பது ஸ்ரீவித்யா  உபாசகர்களில் மிகச் சிறந்தவரும் அம்பிகையின் பரிபூரண அருளைப் பெற்றவருமான பாஸ்கரராயரின் கருத்தாகும். இந்த திதி நித்யாக்கள் என்பவர் யார், யார்அவர்களின் பராக்கிரமங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம். ஸ்ரீலலிதா பரமேஸ்வரியான ராஜராஜேஸ்வரியை ஸ்ரீசக்ர வடிவத்தில் வழிபடும் முறையே  ஸ்ரீவித்யா உபாசனை என போற்றப்படுகிறது.

அதில் பிந்து ஸ்தானம் எனப்படும் மையப்புள்ளியில் அம்பிகை காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக திருவருட்பாலிக்கிறாள். அந்த பிந்து  ஸ்தானத்தைச் சுற்றியுள்ள முக்கோணத்தின் மூன்று பக்கங்களிலும் ஐந்து ஐந்து பேர்களாக இந்த பதினைந்து திதி நித்யா தேவியரும் வீற்றிருந்து அருள்கின்றனர். ஸ்ரீசக்ரம், பிரபஞ்சம், நமது உடல், மந்திரம், குரு இவை ஐந்தும் ஒன்றே என உணர்ந்து நம்மை நாமே வழிபடும் முறையே ‘‘ஸ்ரீவித்யா’’ உபாஸனை பூஜை  முறையாகும்.

இந்த ஸ்ரீவித்யாவின் பிரதம தேவதையான ஸ்ரீபராபட்டாரிகா என வேதங்கள் போற்றும் மகாநித்யாவான லலிதாம்பிகை ஸ்ரீசக்ரத்தின் பிந்து ஸ்தானத்தில்  வீற்றிருக்கின்றாள். இத்தேவியின் கலைகள் பதினைந்தாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக வடிவம் பெற்று பதினைந்து திதி நித்யா  தேவியர்களாக அம்பிகையைச் சுற்றி கொலுவீற்றருள்கின்றனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள். பதினைந்து பீஜங்களும் பதினைந்து  நித்யைகளின் வாசகங்களாக விளங்குவதால் பஞ்சதசாக்ஷரி வித்யைக்கும், நித்யா தேவியர்க்கும் வேறுபாடு இல்லை.

ஒரு மாதம் கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்ல பக்ஷம் (வளர்பிறை) என இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்ஷமும் பதினைந்து நாட்கள்  உடையதாக்கப்பட்டிருக்கிறது. அமாவாசை திதி முதல் பவுர்ணமி திதி வரை மீண்டும் பவுர்ணமி திதி முதல் அமாவாசை திதி வரை ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு திதி நித்யா தேவிக்கு உரியது. மகாநித்யாவாகிய அம்பிகையின் கலைகளில் தோன்றும் பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பக்ஷத்திற்கும் ஒரு  நாளாக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

இந்த திதி தேவிகளின் அடிப்படையில்தான் தெய்வங்களுக்கும் தென்புலத்தார்க்கும் (இறந்த பெரியவர்கள்/முன்னோர்கள்) வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராம நவமி போன்ற திதிகளிலும், தென்புலத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் இறந்த திதிகளிலும் இன்று வரை நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அந்தந்த திதிகளுக்குரிய தேவதைகளை நாம் வழிபடுவதில்லை. அன்றன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல  தேவிகளை மறவாமல் நாம் வழிபட்டு வந்தால் நம்மை வறுமை அணுகாமல் அனைத்து சங்கடங்களிலிருந்தும் நாம் விடுபடுவோம். இது சர்வ நிச்சயம்.

சுக்ல பக்ஷத்தில் 1ம் நித்யா தேவியிலிருந்தும் கிருஷ்ணபக்ஷத்தில் 15ம் நித்யா தேவியிலிருந்தும் பூஜை செய்ய வேண்டும். அமாவாசை மற்றும் பவுர்ணமியன்று வாராஹி, மாதங்கியுடன் கூடிய மஹாநித்யாவான லலிதாபரமேஸ்வரியை வழிபட வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு தேவதை உண்டு. அமாவாசைக்கு பித்ருக்கள், பிரதமைக்கு அக்னி, த்விதியைக்கு பிரம்மா, த்ரிதியைக்கு பார்வதி, சதுர்த்திக்கு கணபதி, பஞ்சமிக்கு நாகராஜா, சஷ்டிக்கு முருகப்பெருமான், ஸப்தமிக்கு  சூரியன், அஷ்டமிக்கு ஈசன், நவமிக்கு அஷ்டவசுக்கள், தசமிக்கு திக்கஜங்கள், ஏகாதசிக்கு யமதர்மராஜன், த்வாதசிக்கு திருமால், த்ரயோதசிக்கு மன்மதன், சதுர்த்தசிக்கு கலிபுருஷன், பௌர்ணமிக்கு சந்திரன் போன்றோர் தேவதைகளாக சொல்லப்பட்டுள்ளனர்.

தேவியை முறைப்படி வழிபடும் நவாவரண பூஜையிலும் சுமங்கலி பூஜையிலும் திதி நித்யா பூஜை முக்கிய இடம் பெறுகிறது. ஒவ்வொரு திதி தேவியைக்  குறிக்கும் விதமாக 15 சுமங்கலிகளையும் 16வது நித்யாவான லலிதாபரமேஸ்வரியாக ஒரு சுமங்கலியையும் பெரிய முக்கோணம் போட்டு காமேஸ்வரி முதல்  சித்ரா வரை பக்கத்திற்கு ஐவராக பிரதட்சிணமாக அமரவைக்கப்படுவர். பூஜை செய்யப்படும் அன்று எந்த திதியோ அந்த நித்யா தேவியின் இடத்தில் உள்ள  சுமங்கலிக்கு முதல் பூஜை செய்யப்படும்.

அமாவாசைக்குப் பின் அந்த பூஜை செய்யப்பட்டால் காமேஸ்வரியிலிருந்து பிரதட்சிணமாகவும், பௌர்ணமிக்குப் பின் அந்த பூஜை செய்யப்பட்டால்  சித்ராவிலிருந்து அப்பிரதட்சிணமாகவும் பூஜிக்கப்படுவர். ஒவ்வொரு நித்யா தேவிக்கும் அவரவர்க்குரிய த்யானஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்யப்பட்டு  மூலமந்திரத்தால் பூஜிக்கப்பட்டு பஞ்சோபசாரத்திலிருந்து தீபாராதனை வரை செய்யப்படும். ‘பிரதிபன்முக்யராகாந்த திதிமண்டல பூஜிதாஎனும் நாமாவை  அடிப்படையாகக் கொண்டே இப்பூஜை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நித்யா தேவிகளைப் பற்றி லலிதாபாக் யோனத்தில்

‘‘அதகாமேஸ்வரி நித்யா நித்யா பகமாலினி
நித்யக்லின்னாபி ததா பேருண்டா வஹ்னி வாஸினி
மஹா வித்யேச்வரி தூதி த்வரிதா குலசுந்தரி
நித்யா நீலபதாகா விஜயா ஸர்வமங்களா
ஜ்வாலாமாலினிகா சித்ரேத்யேதா பஞ்சதசோதிதா’’

- என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேவிகளின் பூஜா விவரங்கள், த்யான ஸ்லோகங்கள் போன்றவை தந்திரராஜம் எனும் நூலில் காணப்படுகின்றன. இன்னமும்  விஸ்தாரமான விவரங்கள் யோக வாஸிஷ்டம், வாஸிஷ்ட ஸம்ஹிதை, ஸனந்தன ஸம்ஹிதை போன்ற நூல்களில் காணக்கிடைக்கின்றன. ஒவ்வொரு  தேவியை பூஜிக்கும் போதும் அவரவருக்குரிய சக்கரங்களாகிய யந்திரங்களையும் சேர்த்து பூஜிப்பதும், விசேஷமான பலன்களை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை நங்கநல்லூரிலுள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் ராஜராஜேஸ்வரி தேவி முன்னால் 16 படிகளைக் காணலாம்.

ஒவ்வொரு படிக்கும் ஒரு திதி நித்யா தேவியின் பெயரைச் சூட்டி, அவரவருக்கான யந்திரத்தையும், தேவியையும் அருகே உள்ள சுவரில் அந்தந்த படிக்கு நேர்  மேலாக அமைத்திருக்கிறார்கள். இந்த அமைப்பினாலேயே ராஜராஜேஸ்வரி தேவியின் சந்நதி சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. சென்னை மயிலை பச்சைப்பட்டு  கோலவிழியம்மன் ட்ரஸ்ட் ஆலயத்திலும் திதி நித்யா தேவியரை அவரவருக்குரிய வாகனங்கள் மீது அமர்ந்த நிலையில் தரிசிக்கலாம். தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர்  பாதையில் உள்ள பண்ருட்டி கண்டிகை எனும் இடத்தில் திதி நித்யா தேவியருக்கென ஓர் ஆலயம் அமைந்துள்ளது.

அங்கு 15 திதி நித்யா தேவியரும் வாராஹி, மாதங்கி போன்றோரும் யந்திர வடிவில், மஹாமேருவாக விளங்கும் லலிதாபரமேஸ்வரியைச் சுற்றிலும்  இடம்பெற்று திருவருட்பாலிக்கின்றனர். ஆதிசங்கரரால் பிரசித்தமானசுபாகம தந்த்ர பஞ்சகம்என்ற நூலில் இந்த தேவியர்களின் உபாசனை பற்றி விளக்கமாகக்  கூறப்பட்டுள்ளது. இந்த நூல் வசிஷ்டர், ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், சுகர் ஆகிய ஐவருடைய பூஜா பத்ததியை விளக்கும் அதியற்புத நூலாகும். ‘இது செய்ய எனக்கு சக்தி இல்லைஎன்று சொல்லித் தவிர்க்காமல் அன்றாடம் அன்றன்றைய நித்யா தேவியை தியானம் செய்தால் நம் அன்றாடைய  வாழ்க்கையை பிரச்னைகள் இல்லாமல் நிர்மலமாகவும் நிம்மதியாகவும் நடத்தலாம் என்பது உறுதி.

சர்வம் சக்தி மயம்,’ ‘எங்கெங்கு காணினும் சக்தியடாஎன்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருவருள் பாலிக்கும் இந்த தேவியரை பற்றி தெரிந்து கொள்வோம். இத்தொடரில் ஒவ்வொரு நித்யா தேவியரின் தோற்றப்பொலிவு, த்யான ஸ்லோகங்கள், காயத்ரி மந்திரம், மூலமந்திரம், மாத்ருகா அட்சர அர்ச்சனை, யந்த்ரம்அதன் விளக்கம், நைவேத்தியம், அந்தந்த தேவியரை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள், அந்தந்த திதிகளில் பிறந்தவர்களின் குணநலன்கள், அத்திதியில்  செய்யத்தக்கவை, அகத்தியர் அருளிய இத்தேவியர்களின் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச துதிகள் ஆகியவை தொகுத்து அளிக்கப்படுகின்றன.

காமேஸ்வரி நித்யாதேவி

இந்த அம்பிகை கோடி சூரியப்ரகாசம் போன்று ஜொலிப்பவள். மாணிக்க மகுடம் தரித்தவள். தங்கத்தினாலான அட்டிகை, பதக்கங்கள், ஒளிரும் சங்கிலிஒட்டியாணம், மோதிரம், கால்களில் கொலுசு அணிந்தவள். ரத்னாபரணங்கள் பூண்டு, பட்டாடை உடுத்தியவள். இந்த காமேஸ்வரி நித்யா தேவிக்கு ஆறு  திருக்கரங்கள். முக்கண்கள். தலையில் சந்திரகலை தரித்திருக்கிறாள். புன்முறுவல் பூத்த முகத்தினள். கருணையை வெள்ளமெனப் பாய்ச்சும் கண்களைக்  கொண்டவள். கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மதனா, உன்மனா, தீபனா, மோகனா, ஸோஷனா எனும் ஐந்து தேவதைகளாலான புஷ்பபாணங்கள்அமிர்தத்துடன் கூடிய ரத்ன பாத்திரம், வரமுத்திரை தரித்தவள்.

ஆசைகள் அதிகமாகும் போது அது காமமாகிறது. சுகத்திற்காகவே மோகமும் அது கிடைக்காதபோது துவேஷமுமாகிறது. ஐம்புலன்கள் மூலமாக உலக  விஷயங்களின் மீதுள்ள பற்று விஷய போகங்களில் சுகம் மிகுந்திருப்பதாக கருதுவதால் சுகத்திற்காக உலக விஷயங்களை நாடி அவற்றின் மீது பற்று  கொள்வதை சிற்றின்பம் என்கிறோம். உண்மையில் இந்த இனிப்பான இன்பம் நீடித்ததல்ல. மிகச்சிறிய காலமே இருந்து மறைந்து விடும். இன்பமானவை  இனிப்பாக இருப்பதை கரும்பு மூலம் தேவி காட்டுகிறாள். ஆனால், காமேஸ்வரியை சரணடைய பேரின்பம் கிட்டும்.

பஞ்சேந்த்ரியங்களை தன் கையிலுள்ள பஞ்சபுஷ்பபாணங்களினால் கட்டுப்படுத்துகிறாள். காமத்தால் மதம் பிடித்து தன்னையும் மற்றவர்களையும் அழிக்க  முயலும்போது தன் கரத்திலுள்ள அங்குசத்தால் அடக்கி அமைதியை நிலை நாட்டுகிறாள். தன் திருவடியைப் பற்றுவோர்க்கு மரணபயத்தை நீங்கச் செய்கிறாள்பக்தர்களின் இதயக்கமலத்தில் விரும்பி வாசம் செய்யும் அம்பிகை இவள். காமேஸ்வரி என்றால் அழகான வடிவத்துடன் இருப்பவள். அல்லது விரும்பிய  வடிவத்தை எடுக்கக்கூடியவள் என்று பொருள். கேட்கும் வரங்களை வாரி வழங்கும் பரம கருணை வடிவினள் இத்தேவி.

அன்னையின் நெற்றியில் கஸ்தூரி திலகங்கள் ஜொலிக்கின்றன. வழிபடும் அன்பர்களின் மனதில் பரிவோடு நித்யவாஸம் செய்து ஆத்ம சுகத்தையும்  பேரின்பத்தையும் அருள்பவள். ஆத்மானுபவத்தில் திளைப்போர்க்கு பேரொளி வடிவமாகக் காட்சி தருபவள். பாவிகளையும் தாய் போல் காப்பவள். அன்பர்களின்  மனதிற்கு இனியவள். மங்களங்கள் அருள்பவள். சௌந்தர்ய ரூபவதி. ஜீவன்களின் பாபமூட்டையைத் தன் கடைக்கண் பார்வையாலேயே சுடுபவள். மனிதர்களை  வருத்தும் பாவங்களும், துன்பங்களும் இந்த தேவியை நினைத்த மாத்திரத்திலேயே மறைந்து விடும்.

இந்த அம்பிகையை வழிபடுவோர் புக்தி, முக்தி இரண்டையும் பெற்று பேரின்பப் பெருவாழ்வை அடைவர் என்பது திண்ணம். வழிபடுபலன் வாழ்வின்  ஆனந்தத்திற்கும், தனவரவு, தனவிருத்திக்கும் இந்த காமேஸ்வரி தேவியின் உபாசனை பேருதவி புரியும். மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கையும் தரும். தீராத  கொடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியமான வாழ்வை அருளும்.

காமேஸ்வரி காயத்ரி

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத். மூல மந்த்ரம்
ஓம் ஐம் க்லீம் ஸௌ: காமேஸ்வர்யை நம: காமேஸ்வரி
இச்சா காம பலப்ரதே ஸர்வ ஸத்ய வசங்கரீ ஹும் ஹும்
ஹும் த்ராம் த்ரீம் க்லீம் ப்லூம் : ஸௌ: க்லீம் ஐம்
காமேஸ்வரி நித்யா தேவ்யை நம:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அம் ஐம் ஸகல ஹ்ரீம் நித்யக்லின்னே
மதத்ரவே ஸௌ: அம் காமேஸ்வர்யை நம:

த்யான ஸ்லோகங்கள்

பாலார்க்க கோடி ஸங்காசம் மாணிக்ய மகுடோஜ்வலாம்
ஹாரக்ரைவேய காஞ்சீபி: ஊர்மிகா நூபுராதிபி:
மண்டிதாம் ரக்தவஸனாம் ரக்தாபரண ஸோபிதாம்
ஷட்புஜாம் த்ரீக்ஷணாமிந்து தலாகலித மௌளிகாம்
பஞ்சாஷ்ட ஷோடசத்வந்த்வ ஷட்கோண சதுரஸ்ரகாம்
மந்தஸ்மிதோல்லஸத் வக்த்ராம் லஜ்ஜா மந்த்ரவீக்ஷணாம்
பாசாங்குசௌ புண்ட்ரேக்ஷு சாபம் புஷ்பசிவீமுகம்
ரத்னபாத்ரம் ஸுதாபூர்ணம் வரதம் பிப்ரதீம்கரை:
ஏவம் த்யாத்வார்சயேத் தேவீம் நித்ய பூஜாஸு ஸித்தயே.
ஸ்ரீமானினி ரமண பத்மஜ சங்கராதி
கீர்வாண வந்தித பதாம்போருஹே
புராணி காமாக்ஷி லோகஜனனீ கமனீய காத்ரி
காமேஸ்வரி த்ரிபுரஸுந்தரி மாம் அவத்வம்.
ரக்தாம் ரக்த துகூலாங்க லேபனாம் ரக்த பூஷணாம்
தனுர்பாணான் புஸ்தகம் சாக்ஷமாலிகாம்
வராபீதிம சதததீம் த்ரைலோக்ய வஸகாரிணீம்
ஏவம் காமேஸ்வரீம் த்யாயேத் ஸர்வஸௌ    பாக்ய வாக்ப்ரதா.
தேவீம் த்யாயேத் ஜகத்தாத்ரீம் ஜபாகுஸுமஸந் நிபாம்
பால பானு ப்ரதீகாசாம் சாதகும்ப சமப்ரபாம்
ரக்த வத்ஸரபரிதானம் சம்பதி வித்ய வசங்கரித்
நமாமி வரதாம் தேவீம் காமேஸ்வரீம் அபயப்ரதாம்.
ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸுக்த ஸம்ஸ்திதாம் அகார ப்ரக்ருதிக அம்ருத கலாத்மிகாம்
காமேஸ்வரி நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வ ஸம்மோ ஹன சக்ர
ஸ்வாமினீம் காமாகர்ஷிணீ சக்தி ஸ்வரூபிணீம், ஸ்ரீ கேசவ
வக்ஷஸ்தல கமல வாஸினீம் ஸர்வ மங்கள தேவ தாம்
ஸ்ரீ ஸௌந்தர்ய லக்ஷ்மி ரூபேண காமேஸ்வர்யை நம:

வழிபட வேண்டிய திதிகள்சுக்ல பக்ஷ ப்ரதமை/அமாவாசை (ப்ரதிபாத திதி ரூப காமேஸ்வரி நித்யாயை நம:)

நைவேத்யம்பசு நெய்.

பூஜைக்கான புஷ்பம்பல வண்ண வாசனையுள்ள மலர்கள்.

திதி தான பலன் இந்த தேவிக்கு பசு நெய்யை நிவேதித்து தானம் செய்தால் நோய்கள் விலகியோடும்.

பஞ்சோபசார பூஜை

ஓம் காமேஸ்வரி நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் காமேஸ்வரி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் இத்திதியில் பிறந்தவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்பவர்களாக விளங்குவார்கள். அலங்காரப் பிரியர்கள்நவரத்தினங்கள், சிவப்பு நிற ஆடைகளை அணிவதில் பிரியம் இருக்கும். தெய்வீகத் தன்மை கொண்டவர்கள். புன்சிரிப்பு முகத்தினர். முக்காலங்களையும் உணரும்  தன்மையுடையவர்கள். அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இத்திதியில் பிறந்தவர்கள் காமேஸ்வரி நித்யா தேவியை வணங்கி வழிபட்டால்  வாழ்வு வளம் பெறும்; தினமும் இத்தேவியின் மூலமந்திரத்தை 45 முறை பாராயணம் செய்தால் சகல துன்பங்களும் விலகும்.

இத்தேவியின் யந்திரம் வரையும் முறைசந்தன குங்குமக் கலவையால் ஐந்திதழ்க் கமலம், அதற்கு வெளியில் எட்டிதழ்க் கமலம், பதினாறிதழ்க் கமலம்ஷட்கோணம் நான்கு வாயில்களுடன் கூடிய சதுரஸ்ரம் கொண்ட பூஜா யந்திரத்தை எழுதி வழிபடவும். எட்டு தளங்களில் அனங்ககுஸுமா, அனங்கமேகலாஅனங்க மதனா, அனங்க மதனாதுரா, மாதவேகினி, புவனபாலா, சசிரேகா, ககனரேகா போன்ற தேவதைகளை வழிபட வேண்டும். பதினாறு தளங்களில் சிரத்தாப்ரீதி, ரதி, தார்தி, விந்தி, மனோரமா, மனோஹரா, மனோரதா, மதன்னோமதிதி, மோகினி, தீபனி, ஸோஷனி, வசங்கரீ, சிஞ்ஜினி, சுபகா, ப்ரியதர்ஷினி போன்ற  சந்திரனின் அமிர்த கலை வடிவான தேவதைகளை  தியானித்து வழிபட வேண்டும்.

அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ அமாவாசை நித்யா தேவி
துதி அமாவாசி தானான அரூபத்தாயே
அகண்ட பரிபூரணையே அமலை சக்தி
நம்மாலே பாடறியேன் நினது பேரில்
நாவிலே வந்தருள்செய் நாயேனுக்கு
தம்மாலே ஷோடஸ தோத்திரம் விளங்க
தயவு செய்து நின் பதத்தில் அளிப்பாய் தேவி
சும்மா நீ இருக்காதே கண் பார்த்தாள்வாய்
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழ்வே!

அமாவாசை இருட்டில் அருவம்தானே மிஞ்சும்! வடிவம் கண்ணிற்குத் தெரியாது. அதாவது, அஞ்ஞான இருட்டிலிருந்து நாம் வெளிவரவேண்டும். புருவமத்திக்கும், பிரமரந்திரத்திற்கும் இடையிலுள்ள எண்வகை நிலைகளில் இறுதி நிலைக்கு உன்மணி நிலை என்று பெயர். சுழிமுனை என்பது முக்கிய  நாடிகளில் ஒன்று. அது வழியேதான் குண்டலினியை யோகிகள் எழுப்பிச் செலுத்துவர்.

அகத்தியர் அருளிய க்ருஷ்ண பக்ஷ பிரதமை நித்யா தேவி துதி
பிரதமையிற் பிரவிடையாய்களை வேறாகி
பிங்கலை விட்டிடைக் கலையிற் பிறந்த கன்னி
உறவாக விரவியை விட்டகலா நின்ற
உமையவளே என் பிறவி ஒழியச் செய்வாய்
இறவாத வரத்துடன் வரம் எட்டெட்டுக்கும்
எளிதாக சித்திக்க எனக்குத் தந்து
சுருதியிலே வந்தருள் செய் அடியேனுக்கு
சோதியே! மனோன்மணியே! சுழுமுனை வாழியவே!

பிரவிடை என்றால் பருவம் அடைந்த பருவ மங்கை. ரவி எனும் சூரியமண்டலத்தை விட்டு அகலாதவள் - பானுமண்டல மத்யஸ்தா என்கிறது லலிதா  ஸஹஸ்ரநாமம். தேவியின் திருவருள் சித்தித்தால் புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, பெருமைஇளமை, துணிவு, கோபமின்மை ஆகிய பதினாறு பேறுகளும் கிட்டும் என்கிறார் அகத்தியர்.

அகத்தியர் செய்த பௌர்ணமி நித்யா தேவி துதி
சித்ரா தேவி நிரஞ்சனமாய் நிராமயமாய் நினைவேயாகி
நீங்காத பெருவாழ்வே லோகமாதா
பரஞ்சோதி யான பூரணியே தாயே
பாற்கடலே எனையீன்ற பரமே சத்தி
பரமாகி யுலகமெலாம் வளர்க்கும் தேவி
சங்கரியே பவுர்ணமியாய் வடிவங்காட்டித்
துரிவான ரிஷிமுனிவர் பணி கொள் செல்வீ
சோதி மனோன்மணித் தாயே சுழிமுனை வாழ்வே.
காமேஸ்வரி

source:Dinakaran

No comments:

Post a Comment

Total Pageviews